Friday, November 29, 2013

இறைவனால் அழைக்கப்பட்டு, தந்தையாகிய கடவுளின் அன்பிலும், இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பிலும் வாழ்கிறவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியனும் யாகப்பரின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:
2 இரக்கம், சமாதானம், அன்பு உங்களுக்குப் பெருகுக!
3 அன்புக்குரியவர்களே, உங்களுக்கும் எங்களுக்கும் கிடைத்துள்ள மீட்பைக் குறித்து எழுத மிக ஆவலாய் இருந்தேன். எக்காலத்துக்கும் நிலைத்திருக்கும்படி இறை மக்களுக்கு அன்று அருளப்பட்ட விசுவாசத்திற்காகப் போராடும்படி உங்களை ஊக்குவிக்க இதை எழுதும் தேவை ஏற்பட்டது.
4 ஏனெனில், திருட்டுத்தனமாகச் சிலர் உங்கள் நடுவில் புகுந்துள்ளனர்; இவர்கள் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாக வேண்டுமென்று முற்காலத்திலேயே மறைநூல் கூறியிருந்தது. இறைப்பற்றில்லாத இவர்கள் நம் கடவுள் தந்த அருள் வாழ்வின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காம வெறியில் உழல்கின்றனர்; நம் ஒரே தலைவரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை மறுக்கின்றனர்.
5 நீங்கள் ஏற்கெனவே இதையெல்லாம் நன்கு அறிந்திருந்தாலும் உங்களுக்கு ஒன்றை நினைப்பூட்ட விரும்புகிறேன்; ஆண்டவர் எகிப்து நாட்டிலிருந்து தம் மக்களை மீட்டாரெனினும், பின்னர் விசுவசியாதவர்களை அழித்துவிட்டார்.
6 அவ்வாறே, தங்கள் மேலான நிலையில் நிலைக்காமல், தம் உறைவிடத்தை விட்டுவிட்ட வானதூதர்களையும், முடிவில்லாக் காலத்துக்கும் கட்டுண்டவர்களாய், மாபெரும் நாளின் தீர்ப்புக்காகக் காரிருளில் அடைத்து வைத்துள்ளார்.
7 அவர்களைப்போல் சோதோம் கொமோராவும் சுற்றுப்புற நகரங்களும் கெட்ட நடத்தையில் மூழ்கி இயற்கைக்கு ஒவ்வாத சிற்றின்பத்தைத் தேடின; அதனால் முடிவில்லா நெருப்பின் தண்டனைக்குள்ளாகி நமக்கொரு பாடமாக உள்ளன.
8 அந்தப் போதகர்களும் அவ்வாறே செய்கின்றனர். எதெதையோ கனவுகண்டு உடலைப் பாவ மாசுக்கு உள்ளாக்குகின்றனர்; ஆண்டவரது மாட்சியை புறக்கணிக்கின்றனர்; வானவர்களைப் பழித்துரைக்கின்றனர்.
9 அதிதூதரான மிக்கேல் மோயீசனின் உடலைப் பற்றிப் பேயோடு வாதாடியபோது அவனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியாமல், "ஆண்டவர் தாமே உன்னைக் கண்டிக்கட்டும்" என்றுமட்டும் சொன்னார்.
10 இவர்களோ தாங்கள் அறியாததையும் பழிக்கின்றனர்; பகுத்தறிவற்ற விலங்குகளைப் போல, இயல்புணர்ச்சியால் இவர்கள் அறிந்திருப்பதும் அவர்களுக்கு அழிவையே விளைவிக்கும்.
11 இவர்களுக்கு ஐயோ கேடு! காயின் சென்ற வழியில் இவர்களும் சென்றார்கள்; பாலாமைப்போல ஆதாயத்துக்காகத் தவறு செய்ய இவர்கள் முழு ஆத்திரத்தோடு ஓடினார்கள்; கோராவைப்போல் கிளர்ச்சி செய்து அழிந்தார்கள்.
12 உங்களுடைய அன்புவிருந்துகளில் உங்களோடு கலந்து கொள்ளத் துணியும் இவர்கள் உங்களை மாசுபடுத்துகின்றனர். தங்களை மட்டும் கவனித்துக்கொள்ளும் மேய்ப்பர்கள் இவர்கள். இவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும் நீரற்ற மேகங்கள்; இலையுதிர்ந்த கனிகளற்ற. அடியோடு பட்டுப்போன, வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள்;
13 தங்கள் வெட்கக் கேடுகளை நுரையாகத் தள்ளும் கொந்தளிக்கும் கடலலைகள்; வழி தவறி அலையும் விண்மீன்கள். இருளுலகம் அவர்களுக்கென்றே ஒதுக்கப் பட்டுள்ளது.
14 ஆதாமுக்குப்பின் ஏழாந் தலைமுறையான ஏனோக்கு இவர்களைப்பற்றியே, "இதோ ஆண்டவர் எல்லாருக்கும் தீர்ப்பிட எண்ணற்ற தம் தூதர்களோடு வந்தார்;
15 இறைப்பற்றில்லாதவர்கள் தமக்கு எதிராகச் செய்த எல்லாச் செயல்களுக்காகவும், பாவிகள் தமக்கு எதிராகப் பேசிய ஆணவச் சொற்களுக்காகவும், அவர்களைக் கண்டிக்க வந்தார்" என்று முன்னுரைத்துள்ளார்.
16 இவர்கள் முணுமுணுத்துக் குறை கூறுபவர்கள்; தங்கள் இச்சைப்படி வாழ்பவர்கள்; பகட்டாகப் பேசுபவர்கள்; தங்கள் நலனை முன்னிட்டு இச்சகம் பேசுபவர்கள்.
17 அன்புக்குரியவர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் முன்பே கூறியதை நினைவில் கொள்ளுங்கள்:
18 "தங்கள் தீய இச்சைப்படி நடக்கும் ஏளனக்காரர் இறுதிக் காலத்தில் தோன்றுவர்" என்று அவர்கள் உங்களுக்குக் கூறினர்.
19 அந்த ஏளனக்காரர்கள் பிரிவினை உண்டு பண்ணுபவர்கள், இயல் புணர்ச்சியின்படி நடப்பவர்கள்; அவர்களிடம் தேவ ஆவியே இல்லை.
20 அன்புக்குரியவர்களே, மிகப் பரிசுத்த விசுவாசத்தை அடிப்படையாய்க் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்புங்கள்; பரிசுத்த ஆவியின் ஆற்றலால் செய்யுங்கள்.
21 நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் இரக்கத்தில் முடிவில்லா வாழ்வை அளிக்கும் நாளை எதிர்பார்ப்பவர்களாய்,
22 கடவுளன்பில் நிலைத்திருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள். தயங்கிக் கிடக்கும் சிலர் உள்ளனர்; அவர்களுக்கு இரக்கங்காட்டுங்கள்.
23 வேறு சிலரைத் தீயினின்று வெளியேற்றிக் காப்பாற்றுங்கள். வேறு சிலருக்கு இரக்கங்காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்: பாவ இச்சையால் மாசு படிந்த அவர்களுடைய ஆடையை முதலாய் அருவருத்துத் தள்ளுங்கள்.
24 தவறி விழாமல் உங்களைக் காக்கவும், தம் மாட்சிமையின் முன்னிலையில் அக்களிப்போடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல, நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்,
25 மகிமையும் மாட்சியும் ஆற்றலும் ஆட்சியும் அன்றும் இன்றும் என்றும் உரியன! ஆமென்.
பெருமை பாராட்டுதல் பயனற்றதே; ஆயினும் பெருமை பாராட்டவேண்டிய தேவை இருப்பதால், ஆண்டவர் அருளிய காட்சிகளையும், வெளிப்பாடுகளையும் சொல்லப் போகிறேன்.
2 கிறிஸ்தவன் ஒருவன் எனக்குத் தெரியும்; அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் வானம் வரை கவர்ந்தெடுக்கப்பட்டான் உடலோடு அங்குச் சென்றானோ உடலின்றிச் சென்றானோ யானறியேன், கடவுளே அறிவார்
3 அந்த ஆள் 'வான் வீட்டுக்குள் கவர்ந்தெடுக்கப்பட்டது எனக்குத் தெரியும். உடலோடு அங்கே சென்றானோ உடலின்றிச் சென்றானோ எனக்குத் தெரியாது, கடவுளுக்கே தெரியும்.
4 அங்கே மனித மொழிக்கெட்டாத சொற்களை, மனிதன் திருப்பிச் சொல்லக் கூடாத சொற்களைக் கேட்டான்.
5 அவனைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன்; என்னைப் பற்றிப் பெருமை பாராட்டாமாட்டேன். என் குறைபாடுகளே எனக்குப் பொருமை!
6 அப்படி நான் பெருமைப்பட விரும்பினாலும், அது அறிவீனமாய் இராது; சொல்வது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதிலும் கேட்பதிலும் உயர்வாக என்னைப்பற்றி யாரும் எண்ணாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.
7 ஆகவே, எனக்கருளிய தனிப்பட்ட வெளிப்பாடுகளால் நான் செருக்குறாதபடி இறைவன் அனுப்பிய நோய் ஒன்று என் உடலில் தைத்த முள்போல் வருத்தியது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்தச் சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருந்தது; நான் செருக்குறா திருக்கவே இவ்வாறு நடந்தது.
8 ஆதலால் என்னிடமிருந்து அதை அகற்றுமாறு மும்முறை ஆண்டவரை வேண்டினேன்.
9 அவரோ, "நான் தரும் அருள் உனக்குப் போதும்; ஏனெனில், மனித வலுவின்மையில் தான் என் வல்லமை சிறந்தோங்கும்" என்று சொல்லிவிட்டார். ஆகையால் நான் என் குறைபாடுகளில் தான் மனமாரப் பெருமைப்படுவேன். அப்போதுதான் கிறிஸ்துவின் வல்லமை என்னுள் குடிகொள்ளும்.
10 ஆகவே, நான் என் குறைபாடுகளைக் காணும்போது, இழிவுறும்போது, நெருக்கடியில் இருக்கும்போது, துன்புறுத்தப்படும்போது, இடுக்கண்ணுறும் போது கிறிஸ்துவை முன்னிட்டு நான் மனநிறைவோடு இருக்கிறேன். ஏனெனில், வலுவின்றி இருக்கும்போது தான் நான் வலிமை மிக்க வனாயிருக்கிறேன்.
11 இப்படிப் பேசுவது அறிவீனமே; நீங்களே என்னை இப்படிப் பேச வைத்தீர்கள். நீங்களே எனக்கு நற்சான்று தந்திருக்கவேண்டும். நான் ஒன்றுமில்லை எனினும், அந்தப் பேர்போன அப்போஸ்தலர்களுக்கு நான் எதிலும் தாழ்ந்தவனல்லேன்.
12 உண்மை அப்போஸ்தலனுக்குரிய அறிகுறிகள் உங்களிடையே செய்யப்பட்டன. நான் கொண்டிருந்த தளார மனவுறுதி, செய்த அருங்குறிகள், அற்புதங்கள், புதுமைகள் இவையே அப்போஸ்தலனைக் காட்டும் அறிகுறிகள்.
13 மற்றச் சபைகளுக்கு நேராத குறை உங்களுக்கு மட்டும் என்னால் என்ன நேர்ந்தது? நான் உங்களுக்குச் சுமையாய் இல்லாததைத் தவிர, வேறு என்ன குறை? ஆம், அது அநியாயந்தான்; மன்னித்துக்கொள்ளுங்கள்.
14 இதோ, மூன்றாம் முறையாக உங்களிடம் வரப்போகிறேன்; இம்முறையும் உங்களுக்குச் சுமையாய் இருக்க மாட்டேன். உங்கள் உடைமை எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டியது நீங்களே. பெற்றோர்க்குப் பிள்ளைகள் பொருள் சேர்த்து வைப்பதில்லை; பெற்றோர் பிள்ளைகளுக்குப் பொருள் சேர்த்து வைப்பதே முறை.
15 ஆதலால் எனக்குள்ளதையும் ஏன், என்னை முழுவதுமே உங்கள் ஆன்மாக்களுக்காக மனமுவந்து தியாகம் செய்வேன். இந்த அளவுக்கு நான் உங்கள் மீது அன்பு வைத்திருக்க, என்மேல் உங்களுக்குள்ள அன்பு குறைந்து கொண்டு போக வேண்டுமா? இருக்கட்டும்;
16 நான் உங்களுக்குச் சுமையாய் இல்லை என்றாலும், சூழ்ச்சிமிக்கவனாய் உங்களைக் கபடமாகச் சிக்க வைத்தேனாம்!
17 அப்படி நான் உங்களிடம் அனுப்பியவர்களுள் எவனைக்கொண்டேனும் உங்களை வஞ்சித்தேனா?
18 தீத்துவைப் போகும்படி கேட்டுக்கொண்டேன்; அவரோடு நம் சகோதரரை அனுப்பினேன்; தீத்து உங்களை வஞ்சித்தாரா? நாங்கள் ஒரே ஆவியானவரின் ஏவுதலால் நடக்க வில்லையா? ஒரே அடிச்சுவடுகளையே பின்பற்ற வில்லையா?
19 நாங்கள் குற்றமற்றவர்களென உங்களுக்கு எண்பிப்பதாக இவ்வளவு நேரமும் எண்ணியிருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள், கடவுள் திருமுன் சொல்லுகிறேன்: என் அன்புக்குரியவர்களே, நாங்கள் செய்வதெல்லாம் உங்கள் ஞான வளர்ச்சிக்காகவே.
20 நான் வரும்போது, உங்களை நான் காண விரும்பும் நிலையில் நீங்கள் இருப்பீர்களோ என்னவோ! நானும் ஒருவேளை நீங்கள் காண விரும்பாத நிலையில் இருக்கலாம். உங்களிடையே சண்டை சச்சரவுகள், பொறாமை, சினம், கட்சி மனப்பான்மை, கோள், புறணி, செருக்கு, குழப்பங்கள் முதலியன இருக்கக் காண்பேனோ என்னவோ!
21 மேலும் நான் உங்களிடம் மறுபடியும் வரும்போது, என் கடவுள் என்னை உங்கள் பொருட்டுத் தாழ்வுறச் செய்வாரோ என்னவோ! முன்பு பாவம் செய்தவர்களுள் பலர் தங்களுடைய அசுத்த செயல்கள், கெட்ட நடத்தை, காமவெறி ஆகியவற்றை விட்டு மனந்திரும்பாதிருத்தலைக் கண்டு நான் அழவேண்டியிருக்குமோ என்னவோ!
ஆண்டவருடைய அடியானான மோயீசன் இறந்த பின்பு, ஆண்டவர் மோயீசனின் ஊழியனும் நூனின் மகனுமான யோசுவாவை நோக்கி,
2 நம் அடியானாகிய மோயீசன் இறந்தான். நீயும் எல்லா மக்களும் எழுந்து, யோர்தானைக் கடந்து இஸ்ராயேல் மக்களுக்கு நாம் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குப் போங்கள்.
3 நாம் மோயீசனுக்குச் சொன்னது போல், உங்கள் காலடிபட்ட இடத்தையெல்லாம் உங்களுக்குக் கொடுப்போம்.
4 பாலைவனமும் லீபானும் தொடங்கி இயூப்ரடிஸ் மாநதி வரையிலும், மேற்கே பெருங்கடல் வரையிலும் அடங்கிய ஏத்தையருடைய நாடெல்லாம் உங்களுக்கு எல்லையாயிருக்கும்.
5 உன் வாழ்நாள் முமுவதும் ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது. நாம் மோயீசனோடு இருந்தது போல, உன்னோடும் இருப்போம். நாம் உன்னை விலக்கி விடவுமாட்டோம், கை விடவுமாட்டோம்.
6 நீ உறுதியும் மனத்திடனும் கொண்டிரு. ஏனெனில், இம்மக்களின் முன்னோர்களுக்கு நாம் வாக்களித்துள்ள நாட்டை நீயே திருவுளச் சீட்டுப்போட்டு இவர்களுக்குப் பகுத்துக் கொடுப்பாய்.
7 நம் அடியானான மோயீசன் உனக்குக் கொடுத்த சட்டங்களை எல்லாம் பேணிக்காத்து அவற்றின்படி ஒழுகுமாறு நீ உறுதியும் மனத்திடனும் கொண்டிரு. நீ எது செய்தாலும் அதைத் தெளிந்து செய்யும் படி அவற்றினின்று சிறிதேனும் வழுவாதே.
8 இச்சட்ட நூல் உன் கையை விட்டுப் பிரியாதிருப்பாதாக. அதில் எழுதியுள்ளவற்றைப் பேணிக் காத்து அவற்றின்படி ஒழுகுமாறு, அவற்றை இரவு பகலாய்த் தியானிப்பாயாக. அப்படிச் செய்தால்தான், நீ உன் வழியைச் செவ்வையாக்கி அறிவுடன் நடந்து கொள்வாய்.
9 உறுதியும் மனத்திடனும் கொண்டிரு என்று இதோ நாம் உனக்குக் கட்டளையிடுகிறோம். திகைக்கவோ மதிகலங்கவோ வேண்டாம். ஏனென்றால், நீ போகும் இடமெல்லாம் உன் ஆண்டவாகிய கடவுள் உன்னோடு இருப்பார்" என்றருளினார்.
10 அப்போது யோசுவா மக்கட் தலைவர்களை நோக்கி, "நீங்கள் பாளையத்தின் நடுவே சென்று மக்களைப் பார்த்து,
11 'பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தயார் செய்யுங்கள். ஏனெனில், மூன்று நாட்களுக்குப் பின் நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப்போகிறீர்கள்' என்று சொல்லுங்கள்" என்றார்.
12 பின்பு யோசுவா ரூபானியரையும், காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி,
13 ஆண்டவருடைய அடியானான மோயீசன் உங்களுக்குக் கற்பித்தவற்றை நினைவில் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்கு இந்த நாடு முழுவதையும் தந்து அமைதி அளித்துள்ளார்.
14 உங்கள் மனைவியரும் பிள்ளைகளும் விலங்குகளும் யோர்தானுக்கு இப்புறத்தில் மோயீசன் உங்களுக்குக் கொடுத்த நாட்டிலேயே தங்கி இருக்கட்டும். ஆனால் நீங்கள் யாவரும் ஆயுதம் தாங்கியவர்களாய் உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகச் செல்லுங்கள்.
15 ஆண்டவர் உங்களைப் போல் உங்கள் சகோதரர்களுக்கும் அமைதி அளித்து, உங்கள் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரை அவர்களுக்கு உதவியாகப் போர்புரியுங்கள். பிறகு யோர்தானுக்கு அக்கைரையில் கிழக்கே ஆண்டவருடைய அடியானான மோயீசன் உஙகளுக்குக் கொடுத்த உங்கள் சொந்த நாட்டுக்கு நீங்கள் திரும்பிவந்து அங்கு வாழ்ந்து வருவீர்கள்" என்றார்.
16 அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறு மொழியாகச் சொன்னதாவது: "நீர் கட்டளையிட்டவற்றை எல்லாம் நாங்கள் செய்வோம். எங்கெங்கு நீர் அனுப்புகிறீரோ அங்கெல்லாம் நாங்கள் செல்வோம்.
17 நாங்கள் மோயீசனுக்குக் கீழ்ப்படிந்து வந்தது போல் உமக்கும் கீழ்ப்படிவோம். உம்முடைய ஆண்டவராகிய கடவுள் மட்டும் மோயீசனுடன் இருந்தது போல் உம்மோடும் இருப்பாராக! உமது சொல்லை மீறி,
18 நீர் இடும் கட்டளைக்குக் கீழ்ப்படியாது நடப்பவன் கொல்லப்படட்டும். நீர் மட்டும் உறுதியும் மனத்திடனும் கொண்டிரும்."